Ad Widget

வடக்கு மாகாண இளைஞர் , யுவதிகள் எதையும் சாதிக்கக்கூடிய சக்தி கொண்டவர்கள் – முதலமைச்சர்

எமது வடமாகாண இளைஞர் யுவதிகள் நினைத்தால் எதனையும் சாதிக்கக் கூடிய சக்தி கொண்டவர்கள். இவர்களை ஊக்குவிக்க எமது விளையாட்டுத் திணைக்களம் காத்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் உதவினாலும் நீங்களே உங்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

cv-vickneswaran-cm

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐந்தாவது வர்ண இரவு விருது வழங்கும்விழா சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

குறித்த விழாவிற்கு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீரவீராங்கனைகள் இந்த விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்கள் இவர்களை நான் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

எமது இளைஞர் யுவதிகள் விளையாட்டுக்களில் முன்னேற இரண்டு முக்கிய தேவைகள் உண்டு என்று நினைக்கின்றேன். ஒன்று நவீன அனுசரணைகள் மற்றையது மக்கள் ஊக்குவிப்பு.

நவீன அனுசரணைகளை வழங்கப் பணம் தேவையாக இருக்கின்றது. அதேபோல மக்கள் ஊக்குவிப்பைப் பெற மனம் தேவையாக இருக்கின்றது. இன்று இந்த விழாவில் மக்களின் மனம் பிரதிபலிக்கின்றது. நாம் யாவரும் சேர்ந்து எவ்வளவுக்கு எமது இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கின்றோமோ அந்த அளவுக்கு அவர்கள் தமது விளையாட்டுக்களில் வருங்காலத்தில் பிரகாசிப்பார்கள்.

இன்றைய வெற்றியாளர்களிலிருந்து பத்து சிறந்த வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கே “வடக்கின் வர்ணம்” என்ற சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல் இந்த வெற்றியாளர்களிலிருந்து மிகச் சிறந்த ஒரு வீரர் அல்லது ஒரு வீராங்கனை தெரிவு செய்யப்பட்டு “வடக்கின் விளையாட்டு நட்சத்திரம்” என்ற வெற்றிக் கேடயமும் வழங்கப்படுகிறது.

இவையாவும் விளையாட்டுத்திடலுக்கு அல்லது விளையாட்டு அரங்கத்திற்கு வெளியில் நின்று, மனங்களால் உங்களை நாங்கள் ஆசீர்வதிப்பதாகும். அதற்கேற்ப ஒவ்வொரு வீர வீராங்கனையும் அடுத்த முறை வெற்றிக் கேடயத்தை தானே பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டும்.

இந்த வர்ணங்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த நாடுகளில் இது பிரசித்தம் பெற்ற ஒரு ஊக்குவிப்பு யுக்தியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவ மாணவியரை இல்லங்களாகப் பிரித்து நிறுத்தி போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்தார்கள்.

அந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு இல்ல வர்ணங்கள் அல்லது இல்ல நிறங்கள் வழங்கப்பட்டன. இந்த வர்ணங்களை அல்லது நிறங்களை கழுத்துப் பட்டிகளில் அல்லது மேலங்கிகளில் தொங்க விட்டார்கள். அத்துடன் வேறு விதங்களிலும் அந்நிறங்களைக் காட்சிப்படுத்தினார்கள். ஒக்ஸ்போர்ட் சர்வ கலாசாலையில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசித்த ஒருவருக்கு “ஒக்ஸ்போர்ட் புளு” என்ற விருது வழங்கப்பட்டது. அதேபோல கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலையும் நீல நிற விருதையே அளித்தார்கள். ஆனால் நீலநிறங்களிலேயே நிற வேறுபாடு இருந்தது. இலண்டன் பல்கலைக்கழகம் கொடுத்த விருது ஊதா நிறமாக இருந்தது. அமெரிக்க பல்கலைக்கழகங்கள் நிறங்களைக் கையளிப்பதை விட சான்றிதழ்களையே பெரும்பாலும் கொடுத்து வந்துள்ளனர். பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் வந்த சகல நாடுகளும் இந்த நிறவிருதைக் கையளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே ஊக்குவிப்பு யுக்தியாகவே இந்த வர்ணங்களை வழங்கி வருகின்றோம்.

இன்றைய விழாவானது எமது இளைஞர் யுவதிகள் இயற்றிய வெற்றிச் செயல்களுக்குப் பரிசாகவும் இனிமேல் இயற்றப் போகும் சாகசங்களுக்கு உந்து சக்தியாகவும் அமைகின்றது.

மேலும் ‘எமது வடமாகாண இளைஞர் யுவதிகள் நினைத்தால் எதனையுஞ் சாதிக்கக் கூடிய சக்தி கொண்டவர்கள்’. இவர்களுக்கு போதிய அனுசரணைகளை வழங்க வரையறுக்கப்பட்ட நிதிகளுடன் எமது விளையாட்டுத் திணைக்களம் காத்துக் கொண்டிருக்கின்றது.

அதற்கமைய எம்மால் முடிந்த வரையில் அவர்களுக்கான உதவிகளைச் செய்வோம். எனினும் உங்கள் கரிசனையும், ஊக்கமும், உற்சாகமுமே உங்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு போகும் என்பதை நீங்கள் மறவாதீர்கள். எல்லா விதத்திலும் எமது வடமாகாணம் சிறந்து விளங்க வேண்டும். விளங்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. உங்கள் அனைவருக்கும் இறைவனின் நல்லாசிகள் கிடைக்கட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts