Ad Widget

வடக்கு மாகாண அலுவலகங்களில் இனிமேல் பிளாஸ்ரிக் பைகள் இல்லை உத்தியோகத்தர்கள் உறுதிமொழி!

வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அலுவலகங்கள் யாவற்றிலும் பிளாஸ்ரிக் பைகளை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழி இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் 82ஆவது அமர்வின்போது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 47ஆம் இலக்க இலங்கை தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் 20 மைக்குரோன்கள் அல்லது அதற்குக் குறைவான தடிப்புக் கொண்ட பிளாஸ்ரிக் பைகளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்;படுத்துவதற்கும் விதிக்கப்பட்ட தடையை பூமி தினமான 22 ஆம் திகதியில் இருந்து வடக்கு மாகாணத்தில் இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு, அன்றைய தினத்தில் இருந்தே வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளும், மருத்துவமனைகளும், அரச திணைக்கள அலுவலகங்களும், பூங்காக்களும், சுற்றுலா மையங்களும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும், ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்ரிக் பொருட்களையும் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே, வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சகல அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அலுவலகங்களில் ‘பூமியின் இயற்கைச் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள பிளாஸ்ரிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்குடன் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும், ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்ரிக்கினால் ஆன குவளைகள், போசன விரிப்புகள், உணவுத் தட்டுகள், உணவுப் பெட்டிகள் ஆகியவற்றையும் இன்றிலிருந்து பயன்படுத்தவும் கொள்வனவு செய்யவும் மாட்டோம்.” என்ற உறுதிமொழி அனைத்து உத்தியோகத்தர்களாலும் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதம செயலாளர் அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் சுற்றுநிருபத்தில் வடக்கு மாகாணசபை நிர்வாகத்துக்கு உட்பட்ட நிதியீட்டங்களில் இருந்து மேற்படி பிளாஸ்ரிக் பொருட்களை இனிமேல் கொள்வனவு செய்ய முடியாது என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts