வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் எயிட்ஸ் தொற்று! : மூவர் உயிரிழப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இவ்வருடத்தில் மாத்திரம் ஆறு பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் மூவர், அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரணி குருபரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒருவரும், யாழ்.மாவட்டத்தில் இருந்து நான்கு பேரும் இவ்வாறு இணங்காணப்பட்டுள்ளனர். 40 தொடக்கம் 65 வயதிற்கு உட்பட்ட 3 பெண்களும், 3 ஆண்களுமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவரும், யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த இருவருமே அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரவுகள் குறிப்பிடுகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட எச்.ஐ.வி. சிகிச்சை பிரிவில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 39 பேர் வரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய 30 பேரும் தற்போது, யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

எச்.ஐ.வி. தொற்றுக்கள் பல்வேறு வழிகளிலும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதால், இதுகுறித்த பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமென யாழ்.போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts