Ad Widget

வடக்கு மக்கள் நல்லொழுக்கம் மிக்கவர்கள்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாழும் பொதுமக்களில் 99 வீதமானோர் நல்லொழுக்கம் மிக்கவர்கள் என்றும், ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு ஏனையோரை மதிப்பிடமுடியாதென்றும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக வடக்கில் செயற்படும் வாள்வெட்டுக் குழுக்களுக்கு பின்னணிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு எவ்வித பின்னணிகளும் கிடையாதென பொலிஸ் அத்தியட்சகர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்தோடு, பொலிஸ் துறையில் காணப்படும் பற்றாக்குறையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 500 பொதுமக்களுக்கு ஒரு பொலிஸ் அதிகாரி என்ற அடிப்படையிலேயே சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட பொலிஸ் அத்தியட்சகர், இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 1000 வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், 18-28 வயதுடைய ஆண் பெண் இருபாலாரும் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளும் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ள முடியுமென தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், அவர்களுக்கு பொருத்தமான பதவிகளுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளதாக இதன்போது குறிப்பிட்டார்.

Related Posts