Ad Widget

வடக்கு மக்கள் தொடர்பில் விசேட கவனம்! சபையில் ரணில் தெரிவிப்பு

“யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளின்றி தவிக்கும் நிலையில், 200 கோடி ரூபா செலவில் மஹிந்த அரசு அங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்க முற்பட்டது. இதை நாம் நிறுத்தியுள்ளோம். அத்துடன், 10 வருடங்களில் மஹிந்த அரசால் செய்யமுடியாத விடயங்களை தற்போதைய அரசு 88 நாட்களில் செய்திருக்கிறது.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ranil

புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டங்களுள் நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையயான்றை விடுத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இப்படிக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 88 நாட்கள் முடிவடைந்துள்ளன. இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் திருப்தியடைகிறோம். குறிப்பாக, தனியார் துறைக்கான சம்பள உயர்வு தொடர்பில் சம்பள நிர்ணயக் குழுவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் விரைவில் தனியார் துறைக்கான சம்பளமும் உயரும். இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டதுபோல் விருப்பு வாக்கு முறைமையை முற்றாக நீக்கிவிட்டு சகல தொகுதிக்கும் எம்.பி. ஒருவர் கிடைக்கும் வகையில் தொகுதிவாரி, விகிதாசார வாக்கு முறை கலந்து புதியதொரு தேர்தல் முறைமையயான்று உருவாக்கப்படவுள்ளது.

இதற்கு தேசிய நிறைவேற்றுச் சபையாலும் இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினூடாக சட்டவரைபை தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். இதை விரைவாக செய்து முடிக்கவேண்டும் எனக் கருதுகின்றோம். குறிப்பாக, 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தேசிய கணக்காய்வு சட்டமூலம், தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகியன அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் டிசம்பருக்குள் அது சாத்தியமாகும். அதாவது, தடை நீக்கப்படும் என நம்புகின்றோம். அத்துடன், ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை செப்டெம்பருக்கு பின் ஆரம்பிக்கப்படும்.

அதேவேளை, யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் தொடர்பிலும் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். காணிகளை மீளக் கையளிக்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நானும் அதன் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டே நிகழ்வில் பங்கேற்றோம். ஜனாதிபதி இவ்வாறு ஆரம்பித்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே நானும் அண்மையில் வடக்குக்குச் சென்றேன். 10 அறைகள் மற்றும் நீச்சல் தடாகங்களுடன் 200 கோடி ரூபா செலவில் யாழில் நிர்மாணிக்கப்படவிருந்த ஜனாதிபதி அரச மாளிகையை நாம் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்” – என்றார்.

Related Posts