Ad Widget

வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்காவிட்டாலும் அப்பகுதிகளுக்கும் அபிவிருத்திகளை தொடருவோம்- பிரதமர் மஹிந்த

வடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது. இனிமேல் அந்தக்கட்சி ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது.

யாராவது இந்தக் கட்சி இணையும் என்று நினைத்தால், அது நிச்சயமாக பகல் கனவாகத்தான் முடியும்.

இன்று அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியானது, எம்மை வீழ்த்த அல்ல. மாறாக, சிறிகொத்தவை யார் கைப்பற்றுவது என்பதே அவர்களின் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.

பிரேமதாச தரப்பா அல்லது ரணில் தரப்பா என்பதுதான் இங்கு உள்ள போட்டியாகும். ஒருவர் சிறிகொத்தவை பாதுகாக்க போராடுகிறார். இன்னொருவர் அதனைக் கைப்பற்ற போராடுகிறார்.

இதற்காகத் தான் இவர்கள் போட்டி போடுகிறார்கள். இந்த பிரச்சினைக்காக மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

அந்தப் பிரச்சினையை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். நாம் நாட்டை பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

வடக்காகட்டும், கிழக்காகட்டும், மலையகமாகட்டும், இந்த நாட்டின் அனைத்து பகுதிகளும் அபிவிருத்தி அடைய வேண்டும். இதற்காகத் தான் நாம் களமிறங்கியுள்ளோம். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாம் அந்த மாகாணத்தை நிச்சயமாக அபிவிருத்தி செய்தே தீருவோம். அது எமது பொறுப்பாகும்.

ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திலிருந்தால், எந்த வேலையும் நடக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts