Ad Widget

ஊழலிலும் ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபட எவரையும் ஈடுபட அனுமதிக்க மாட்டோம்- சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் வீட்டுத் திட்டத்தை சாட்டாகப் பயன்படுத்தி ஊழலிலும் ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபட எவரையும் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சால் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மாதிரிக்காக 2 வீடுகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கு கடும் எதிரப்புத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு கேள்விஅறிவித்தல் கோர முன்னமே வீடுகளை அமைக்கும் நிறுவனத்தின் பெயர் (அஸார் மிட்டார்) கடந்த வருடத்தின் ஜூலை மாதத்திலேயே கூறப்பட்டு விட்டது. பின்னர் கண் துடைப்புக்காகவே கேள்வி கோரப்பட்டது.

இதை எதிர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை பிரதமரின் கவனத்துக்கும் கொண்டு வந்தது. இதன் பின் மீள்பரிசீலனையும் செய்யப்பட்டது. ஆனால் குறித்த வீட்டுத்திட்டம் எமது இடத்தின் காலநிலை மற்றும் வாழ்க்கை முறைக்குப் பொருந்துமா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகளவிலான வீடுகள் தேவைப்படுகின்றன.

இந்த வீட்டுத்திட்டம் பல ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கும். மேலும் இந்த வீட்டுத்திட்டத்திற்கு பயனாளிகள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார்கள்? என்பன போன்ற பல விடயங்களில் சிக்கல்கள் இருக்கின்றன.

எங்களுடைய மக்களுக்கு வீடுகள் நிச்சயமாக தேவை – அவசியமான தேவை என்பதை காரணமாக வைத்துக் கொண்டு எங்கள் மக்களுடைய பெயரில் யாரும் ஒழுங்கீனமாக நடக்கவோ அல்லது ஊழல் செய்யவோ இடமளிக்கப்படாது – என்றார்.

Related Posts