Ad Widget

வடக்கு-தெற்கு மாபெரும் துடுப்பாட்ட சமர் ! யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி எதிர் கொழும்பு ஆனந்தாக்கல்லூரி

செப்ரம்பர் மாதம் 7ம் 8ம் திகதிகளில் இரு நாட்களைக் கொண்ட மாபெரும் துடுப்பாட்ட சமர் ஆனந்தாக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், ஆனந்தாக் கல்லூரியின் புகழ்பெற்ற ஆசிரியரும், பகுதித் தலைவருமான திரு.சிவகுருநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக இச்சமர் இடம் பெறுகிறது.

கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 1886ம் ஆண்டு சிங்கள கலாசாரத்தையும் பௌத்த நாகரீகத்தையும் வளர்ப்பதற்காக கொலனல் ஹென்றி ஸ்ரீல் ஓல்கோட் (Colonel Henry steel Olcott) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி ஆண்கள் பாடசாலையாகும். தரம் 1 – 13 வரையும் வகுப்புக்கள் உள்ளன தற்போது 8000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் இது ஒரு தேசிய பாடசாலையாகும். 20 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 250 ஆசிரியர்கள் கல்வியை போதிக்கின்றனர். தற்போதய அதிபர் திரு L.M.D தர்மசேனா அவர்கள் ஆவார்.இலங்கைத் தேசிய துடுப்பாட்டஅணியின் முன்னாள் தலைவர் திரு.அர்ஜூண ரணதுங்க, மாவன் அத்தபத்து , திலக் சமரவீர இவர்கள் இக்கல்லூரியின் பழைய மாணவர்களாவர்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1890ம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சிந்தனையில் தமிழர் கலாச்சாரத்தையும், சைவ சமயத்தையும் வளர்க்கும் நோக்குடன் அட்வகேட் நாகலிங்கம் அவர்களினாலும் பசுபதி செட்டியார் அவர்களினாலும் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் தரம் 6 – 13 வரைக்குமான வகுப்புக்கள் உள்ளன. இதுவும் ஆண்கள் பாடசாலையாகும். அத்துடன் தேசிய பாடசாலையாகவும் விளங்குகின்றது. தற்போது 2315 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

ஆசிரியர்கள் தொகை 92 ஆகும். இக்கல்லூரி 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது தற்போதைய அதிபராக திரு.வீ.கணேகராசா கடமையாற்றுகிறார். இக்கல்லூரியின் துடுப்பாட்ட அணியினர் பலவருடங்களாக இலங்கை துடுப்பாட்டசபை நடாத்தும் துடுப்பாட்ட போட்டிகளில் மாகாணமட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குச் தெரிவாகி வருகின்றனர்.

இத்துடுப்பாட்ட போட்டி வருடாவருடம் இடம் பெறவுள்ளது. இவ்வாறான துடுப்பாட்ட சமர் மூலம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரர்கள் தேசிய துடுப்பாட்ட அணியில் சேர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் போட்டியின் மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பேணிப் பாதுகாக்க முடியும்.

இப் போட்டியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கொழும்பு ஆனந்தாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இணைந்து நடாத்துகின்றன.

மேலதிக விபரங்களை http://www.jhc.lk .ல் பார்வையிட முடியும்.

Related Posts