Ad Widget

வடக்கு கூட்டுறவாளர்களுக்கு வாழ்க்கைப்படி அதிகரிப்பு, கூட்டுறவு அமைச்சர் அறிவிப்பு

வடக்கு மாகாண கூட்டுறவுப் பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு எமது அமைச்சால் 100 நாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் அங்கமாக கூட்டுறவு பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுப் படியை அதிகரித்துக் கொடுப்பது என்று கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

நிரந்தர பணியாளர்கள் 5 ஆயிரத்து 750 ரூபாவினை வாழ்க்கைச் செலவுப் படியாக மாதாந்தம் பெற்று வருகின்றனர்.

எனினும் எதிர்வரும் யூன் மாதம் முதலாம் திகதியில் இருந்து வாழ்க்கைச் செலவுப் படியாக 7ஆயிரத்து 800 ரூபா பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இருப்பினும் 2012 ஆம் ஆண்டே இந்த வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் . எனினும் அதிகரிப்பு செய்யப்படவில்லை.

வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுப் பணியாளர்கள் இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை எமக்கு செய்துள்ளனர். இவற்றை கருத்தில் எடுத்தே கூட்டுறவு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

நிரந்தர பணியாளர்களுக்கு மாத்திரமே இந்த அதிகரிப்பு வழங்கப்படும். தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் இதற்கு உருத்துடையவர்கள் அல்லர்.

இந்த 100 நாள் வேலைத்திட்டமானது கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த 100 நாள் முடிவடைவதற்குள் கூட்டுறவுக்கான நியதிச்சட்டமும் உருவாக்கப்படும்.

தற்போது நியதிச் சட்டம் தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்து விட்டன . மிகவிரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts