Ad Widget

வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாளை(செவ்வாய்கிழமை) முதல் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம்.

சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மதியம் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி, மாத்தறை மற்றும் இரத்னபுரி மாவட்டங்களில் காலையில் இலேசான மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு மாகாணத்திலும், கண்டி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் 40 கி.மீ வேகம் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது.

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலையில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலி முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கடல் பகுதியில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மதியம் அல்லது இரவு நேரங்களில் காங்கேசன்துறை முதல் மன்னர் மற்றும் கொழும்பு வழியாக காலி வரை மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும்.

வடகிழக்கு மற்றும் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 25-35 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை மன்னார் மற்றும் புத்தளம் வரையான கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். இங்கு காற்றின் வேகம் சில நேரங்களில் 50-55 கிமீ வேகம் வரை அதிகரிக்கும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக 70-80 கி.மீ வேகத்தில் வலுவான காற்று வீசும். கடல்ப்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts