Ad Widget

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசம் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? முதலமைச்சர் சவால்

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் அவர்களுக்கு சமஷ்டியை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு-கிழக்கு மக்களை வந்தேறுகுடிகள் என்று கூறுபவர்கள் சரித்திரபூர்வமாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பார்களானால் வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கையினை இப்போதே கைவிட்டு விடுகின்றோம் என்றும் சவால் விடுத்துள்ளார்.

eluga-tamil-5

தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியின் பொதுக்கூட்டம் நேற்று (சனிக்கிழமை) முற்றவெளியில் இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

‘வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின பூர்வீக பிரதேசங்கள் இல்லை எனவும், குறித்த பிரதேசங்களில் பௌத்த மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தென்னிலங்கையினைச் சேர்ந்த சிலர் கூறிவருகின்றனர். உண்மையிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் பௌத்த மதத்தினை தழுவி வாழ்ந்தமையினால், பௌத்த அடையாளச் சின்னங்கள் உருவாக்கப்பட்டிருந்தன என்பதே உண்மையாகும்.

உண்மையை மறைத்து வரலாற்றை திரிபுபடுத்தி புதுக்கதை சொல்கிறார்கள். இவ்வாறானவர்கள் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய தாயகப் பிரதேசம் இல்லை என்பதை முடியுமானால் நிரூபித்துக் காட்டட்டும்.
மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பாடமையின் வெளிப்பாடாகவே இன்று நாம் இந்த இடத்தில் ஒன்று கூடியுள்ளோம். தனி மனிதர்களாக நாம் அவற்றை சொல்லும் போது, யாரும் கருத்தில் கொள்வதில்லை. இதனாலேயே நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய சூழலில் இது தேவைதான என்று நம்மவர்கள் சிலர் கேள்வி கேட்பதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், எமது பிரச்சினைகளை எமது தேவைகளை, இப்போது சொல்லாலமல் எப்போது சொல்வது என்றும் கேள்வி எழுப்பியமைக் குறிப்பிடத்கதக்து.

Related Posts