Ad Widget

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐ.நா.வை சமாளிப்பதற்கானது: சுரேஸ்

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐக்கிய நாடுகள் சபையை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த செயலணியின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரில், ஈழத் தமிழர் பிரச்சினை முக்கிய விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள செயலணிக் கூட்டத்திற்கான அழைப்பானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பயன்படுத்தப்படுமே தவிர தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக எத்தகைய காத்திரமான முடிவுகளையும் இந்தக் கூட்டங்களில் எடுக்கப்போவதில்லை.

இதுவரை புதிய அரசியல் சாசனம் என்பதை முதன்மைப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை ஆகியவற்றை கருத்திற்கொள்ளாது, மீண்டும் ஐ.நா.வில் இலங்கை அரசைக் காப்பாற்றும் வகையில் ஜனாதிபதியின் கூட்டங்களில் கலந்துகொண்டு அவரது பிரசார உத்திகளுக்கு உதவுவதானது சம்பந்தனின் இராஜதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

முதலமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக நினைத்து, அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் எதிராகச் செயற்படுவதும் அர்த்தமற்ற குழந்தைத்தனமான நடவடிக்கைகளாகும்.

அரசியல் தீர்வை எட்டும்வரை சில்லரை விடயங்களில் அகக்றை செலுத்தப்போவதில்லை என்று இதுவரை கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இப்பொழுது அபிவிருத்தி விடயத்தில் கவனம் செலுத்துவது ஏன் என்பதைப் பற்றியும், நாடாளுமன்றத்தினூடாக தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும் ஆற்றமுடியாத கருமங்களை இச்செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்வதால் நிறைவேற்றமுடியுமா என்பதையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts