Ad Widget

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் : காலதாமதம் ஏன்?

வடக்கு, கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதாவது வீட்டின் அளவுத் திட்டம், வடிவமைப்பு, பயனாளிகள் தெரிவு, ஒரு வீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சமூக அமைப்புக்கள் கேள்வியெழுப்பியுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் 2.1மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். இதற்கான வடிவமைப்பு ஒப்பந்தகாரர்களுடன் இணைந்து தயாரிக்கப்படும்.

ஒவ்வொரு வீடுகளும் 520 சதுர அடி பரப்பைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கான நிதியில் தொலைக்காட்சி, சில தளபாடங்கள் மற்றும் சூரிய ஒளிச் சேகரிப்பான் (சோலர்) போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘இவற்றுக்கப்பால் அரசாங்கத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்திற்கான செலவு தெளிவற்றதாக உள்ளது. இந்திய வீட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையின் நான்கு மடங்கு நிதி சிறிலங்கா அரசாங்கத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்காக ஓதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அல்லது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்களை விட தற்போது மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி அதிகமாகும்’ என துறைசார் வல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்களால் அனுசரணையுடன் சிவில் சமூக அமைப்புக்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான வேறுபாடுகள் சமூகங்கள் மத்தியில் குழப்பங்களையும் சமத்துவமின்மையையும் பல்வேறு நியமங்களையும் உருவாக்கும் என இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான சுவிஸ் அமைப்பின் அனுசரணையுடன் வறுமை ஆய்வு மையத்தால் 2013 தொடக்கம் 2015 இற்கு இடையிலான காலப்பகுதியில் வீட்டுத் திட்டப் பயனாளிகள் மத்தியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ‘இடம்பெயர்ந்த மக்களுக்கான ரூபா 550,000 வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை ஆராய்ந்த போது இதன் முதற்கட்டத்தில் இரண்டு பயனாளிகள் மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேல் செலவு செய்து தமது வீடுகளைப் புனரமைத்துள்ளனர்.

இதேபோன்று இரண்டாம் கட்டத்தில் மூன்று பயனாளிகள் மாத்திரம் ஒரு மில்லியனுக்கு மேல் செலவு செய்து தமது வீடுகளைப் புனரமைத்துள்ளனர்’ என வறுமை ஆய்வுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் வகிசா குணசேகர தெரிவித்துள்ளார்.

மில்லியன் ரூபாக்கள் செலவில் சிறந்த வீட்டைக் கட்டமுடியுமாயின் ஏனைய நிதியை மக்களின் வாழ்வாதரம் மற்றும் அவசியமான தேவைகளுக்காக முதலீடு செய்ய முடியும் என்பது சிவில் சமூக அமைப்புக்களின் கருத்தாகும். வீடுகளை நிர்மாணிப்பதற்கு உள்ளுர் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

மாறாக தொலைக்காட்சிகள் மற்றும் சூரியஒளிச் சேகரிப்பான்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யும் போது இதற்கான செலவு அதிகரிக்கும்.

இவற்றுக்குப் பதிலாக பயனாளிகளுக்கு ஒரு மில்லியன் செலவில் நல்ல வீட்டை நிர்மாணிப்பதற்கும் ஏனைய நிதியை அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வழங்கும் போது உள்ளுர் பொருளாதாரம் விருத்தியடைவதுடன் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். ‘போருக்குப் பின்னான கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கின் முதன்மைப் பொருளாதாரமான விவசாயம் மற்றும் மீன்பிடி போன்றவற்றின் பாரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் சரிவடைந்துள்ளது’ என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் பொருளியலாளரான அகிலன் கதிர்காமர் தெரிவித்தார்.

‘இந்தியா மற்றும் சுவிஸ் போன்ற பல உலக நாடுகளின் நிதியுதவியுடனான வீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போது மேசன் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கான கேள்வி அதிகரித்தது. வீடுகள் புனரமைப்பதன் மூலம் பெறப்பட்ட வருவாய் உள்ளுர் மக்களின் பொருளாதார உயர்வுக்கு வழிவகுத்தது’ என கதிர்காமர் குறிப்பிட்டார்.

‘அரச நிதியுடன் வெளிநாட்டு ஒப்பந்தகாரர் மூலம் 65,000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதானது உள்ளுர் மக்களின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்’ என கதிர்காமர் சுட்டிக்காட்டுகிறார்.

‘கடந்த காலங்களில் வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் உள்ளுர் மேசன்மார் மற்றும் கூலியாட்கள் பெற்று வந்த சம்பளமானது உள்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது. ஆனால் தற்போது வெளிநாட்டு ஒப்பந்தகாரரிடம் நிர்மாணிப்புப் பணியை ஒப்படைப்பதானது பெருமளவு சிறிலங்கா அரச நிதி வெளிநாட்டைச் சென்றடைவதற்கான கெட்டவாய்ப்பாகும்.

இதனால் இந்த வெளிநாட்டு ஒப்பந்தகாரர் இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்’ என கதிர்காமர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘இதற்கப்பால், வீடுகளைக் கட்டுவதுடன் தொடர்புபட்ட சீற் மற்றும் ஒடு தயாரிப்புத் தொழிற்சாலைகள், தச்சுத் தொழிற்கூடங்கள் போன்றனவும் பாதிக்கப்படுகின்றன.

ஆகவே சிறந்த முறையில் மக்களின் பங்களிப்புடன் உள்ளுர் தொழில் வளங்களைப் பயன்படுத்தி இந்த வீடுகளைப் புனரமைப்பதற்கான திட்டத்தை சிறிலங்கா அரசு முன்னெடுக்குமாயின் உள்ளுர் பொருளாதாரம் செழிப்படையும்’ என அரசியல் பொருளாதார ஆய்வாளர் கதிர்காமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts