Ad Widget

வடக்கு கால்நடை அமைச்சால் கோழிக்குஞ்சுகள் விநியோகம்

கிராமப்புற மக்களின் போசாக்கு மட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை வடமாகாண கால்நடை அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த சனிக்கிழமை (16.04.2016) வேலணையில் தொடக்கி வைத்துள்ளார்.

வேலைணையில் கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற தொடக்க நிகழ்ச்சியில் முதற்கட்டமாக வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 117 பயனாளிகளுக்கு கொல்லைப்புற கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் யாழ் மாவட்டத்தில் 700 குடும்பங்களுக்கு ஒருமாத வயதுடைய 200 கோழிக்குஞ்சுகளும், 561 குடும்பங்களுக்கு ஒருநாள் வயதுடைய 30 கோழிக்குஞ்சுகளும் வழங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கென வடக்கு விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து 5.38 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுவரும் கொல்லைப்புறக் கோழிக்குஞ்சுகள் நாட்டுப்புறக் கோழிகளையும் உயர் இனக்கோழிகளையும் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பினம் ஆகும். இது சுவையாலும், போசணையாலும் நாட்டுக்கோழிகளின் முட்டைகளுக்கு ஒப்பான முட்டைகளை இடுவதுடன் நாட்டுக்கோழிகள் இடுவதைப்போல இரட்டிப்பு மடங்கு எண்ணிக்கையில் முட்டைகளை இடவல்லது. அத்தோடு உயரினக் கோழிகளைவிட அதிக நோய்எதிர்ப்பு சக்தியையும் கொண்டுள்ளன. இதனாலேயே கால்நடை அமைச்சு போசாக்கு மட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் திட்டத்தில் இப்புதியரக கொல்லைபுறக் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. இத்திட்டம் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரப் பணிப்பாளர் சி.வசீகரன், பிரதி கால்நடை உற்பத்திச் சுகாதாரப் பணிப்பாளர் திருமதி வ.அமிர்தலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

01

02

03

04

05

06

07

08

09

10

11

Related Posts