Ad Widget

வடக்கு கடலில் சோதனைகளை தீவிரப்படுத்த கடற்படைக்கு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவு!

வட இலங்கையின் ஆட்புல கடல் எல்லைக்குள் பயணிக்கும் அனைத்து படகுகளையும் திடீர் சோதனை நடத்தி போதைப்பொருள் கடத்தல்களைத் தடுத்து நிறுத்துமாறு வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேநேரம் கொழும்பில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரின் பிரிவொன்றை வடகடலில் கடலோரக் காவல் நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி பரிந்துரை செய்திருக்கின்றார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கொன்றில் பிணை வழங்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் மீதான விசாரணையின் போதே, கடற்படையினருக்கான இந்தப் பணிப்புரையும் போதைப்பொருள் தடுப்புப் பொலிசாருக்கான பரிந்துரையும் கடந்த புதன்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் வடபகுதிக்குள் கேரள கஞ்சா இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்படுகின்றது என்பது உறுதியாகிவிட்டது.அண்மைக் காலமாக மாதகல், பருத்தித்துறை, மயிலிட்டி, மன்னார் ஆகிய வடபகுதி கடற்கரைகளிலும், நிலப்பகுதிகளிலும் பெருந்தொகையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டு, அவற்றைக் கடத்தி வந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்த போதைப் பொருட்களைக் கடத்தி வரும் படகுகள் எவை, அத்துடன் நடுக்கடலில் போதைப் பொருட்களை ஒன்றில் இருந்து மற்றொன்றிற்குப் பரிமாற்றம் செய்வதில் ஈடுபடும் படகுகள் எவை என்பதைக் கண்காணித்து கையும் மெய்யுமாகப் பிடித்து போதைப் பொருட் கடத்தலை முறியடிக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் கடல் வழியாகவே கடத்தப்படுவதனால், இந்தக் கடத்தல் நடவடிக்கைகளை நடுக்கடலிலும், கடல் எல்லையிலுமே தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருட்கள் கரைக்கு வந்து சேரும் வரையில் சட்டம் பொறுத்திருக்க முடியாது. இலங்கைக் கடல் இலங்கைக்கே சொந்தமானது. எனவே, அனந்தக் கடல் வழியாகக் கடத்தி வரப்படுகின்ற போதைப் பொருட்களைக் கைப்பற்றி அவற்றைக் கொண்டு வருபவர்களைக் கைது செய்யும் பொறுப்பு கடற்படையினருக்கு உண்டு. எனவே, வடகடலில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்து, சோதனை நடவடிக்கைளைத் தீவிரப்படுத்தி கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலை முறியடிக்குமாறு வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது.

அதேநேரம் கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பொலிஸாரின் விசேட கடலோரக் காவல் பிரிவு ஒன்றை உருவாக்கி வடகடலில் இந்தியாவில் இருந்து நேரடியாக பொருட்கள் வரக்கூடிய கடலோர எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் மா அதிபருக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கின்றது. இந்த போதைப்பொருள் கடத்தல் முறியடிப்புக்கான விசேட கடலோர பொலிஸ் காவல் பிரிவினர் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் வரையிலும், மறுபக்கமாக ஊர்காவற்றுறையில் இருந்து பருத்தித்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலும் கண்காணிப்பு மற்றும் தமது சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கடலோரப் பகுதிகள் வழியாகவே இந்தியாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படும் ஆரம்ப மற்றும் மையப் பிரதேசங்களாகத் திகழ்கின்றன.இந்தப் பிரதேசங்களின் ஊடாக வடபகுதிக்குக் கடத்தி வரப்படுகின்ற போதைப் பொருட்களில் 25 வீதமானவை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளிலும், 75 வீதமானவை நாட்டின் தென்பகுதி பிரதேசங்களிலும் வியாபாரத்திற்காகக் கடத்திச் செல்லப்படுகின்றன.இது விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.எனவேதான் போதைப் பொருள் கடத்தலுக்கான முக்கிய தளமாக வடபகுதியும் யாழ்ப்பாணமும் திகழ்வதாகக் கூறப்படுகின்றது.

எனவே, அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும் கடற்படையினரும், பொலிசாரும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள ஒரு நிலையில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வழக்கில் பிணைகோரி செய்யப்பட்டுள்ள மனுவை சாதகமாகப் பரிசீலனை செய்து பிணை வழங்கவது என்பது போதைப் பொருள் தொடர்பில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில் பிழையான வழிகாட்டல் நடவடிக்கையாகவும் முரண்பட்ட நடவடிக்கையாகவும் அமைந்துவிடும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் கடற்படையினருக்கான பணிப்புரையை வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கும். போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான விசேட கடலோரக் காவல் பிரிவின் உருவாக்கத்திற்கான பரிந்துரையை பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Posts