Ad Widget

வடக்கு கடற் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் மீனவப் பிரதிநிதிகள் நிகழ்நிலையில் சந்திப்பு!

வடமாகாண கடற் தொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை ஜூம் (zoom) செயலி ஊடாக நேற்று முன்தினம் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ்ப்பாணம் உள்ள தீவு மன்னர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.

குறித்த காலந்துரையாடலில் யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கூறுகையில் சட்ட விரோத சுருக்கு வலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருந்தும் கடற்படை அதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதாக தெரிவித்தார்.

பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு கடற் படைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

மேலும் அவர் கூறுகையில் யாழ். பருத்தித்தீவில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கடல் அட்ட பண்ணைக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்படுவதாக தெரிவித்ததுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளைப் பணிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

முல்லத்தீவு கடற் தொழிலாளர் சார்பில் கிராமிய கடற் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருள் நாதன் கருத்துத் தெரிவிக்கையில் எமது கடற் தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ள முடியாத துப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் தடையின்றி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற சட்ட விரோத சுருக்கு வலைத் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்படைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அழுத்தம் வழங்குமாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் சார்பில் அதன் தலைவர் ஆலம் பங்கு பற்றியதுடன் தமது பிரதேசத்தில் அமைக்கப்படும் காற்றாலையால் தமது பிரதேச மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநரைக் கோரினர்.

மேலும் தமது பகுதியில் அகழப்படும் கனிய மணல் தொடர்பில் தாம் பல போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் தொடர்ச்சியாக அதன் செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாக குற்றச்சாட்டியதுடன் அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரினர்.

இவ்வாறு பல விடயங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநருக்கு சுட்டிக்காட்டிய மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் குறித்த விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகளையும் மீனவப் பிரதிநிதிகளையும் அழைத்து பிரச்சனைகள் தொடர்பில் கலந்து உரையாடி முடிவு ஒன்றை எட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் சுருக்கு வலை தொடர்பில் சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடையங்களை மீறி தொழில் செய்ய முடியாது என கூறியதுடன் மீனவ சங்கங்கள் எழுத்து மூலம் தந்தால் நீதிமன்ற நடவடிக்கைக்கு தான் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts