Ad Widget

வடக்கு இளைஞர்களே 2 மாதம் பொறுமையாக இருங்கள்: மகிந்தானந்த

நாட்டில் அமையவுள்ள எமது புதிய அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள இளைஞர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதற்கு இளைஞர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிசொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்தானந்த மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இங்கிருந்துதான் தர்ஸினி என்ற வீராங்கனையும் தெரிவானார்.அவர் இப்போது உலக நாயகியாக சாதித்து வருகின்றார். இவ்வாறான இளைஞர்களிற்காக எமது அரசாங்கத்தினால் இந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு இந்த விளையாட்டு மைதானத்தின் பணிகளை நாம் ஆரம்பித்து வைத்தோம்.

ஆனால் எம்மால் மேற்கொள்ளப்பட்ட 50 சதவீதமான பணியை தவிர வேறு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது. நான்கரை வருடங்களாக இந்த விளையாட்டு மைதானத்தை அமைத்து மக்களிற்கு வழங்க முடியாது போயுள்ளது.

இவ்விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றில் பேசுவதில்லை. அவர்கள் அங்கு எதையும் பேசமாட்டார்கள்.

இந்த விளையாட்டு மைதானத்தை திறந்து, மக்களிற்கு வழங்க வேண்டுமென நான் சிறிதரனிடமும் பலமுறை பேசியுள்ளேன்.

ஆகையால் 2 மாதம் பொறுமையாக இருங்கள். புதிய அரசாங்கம் அமையப்பெற்றவுடன் வடக்கு இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருகின்றோம்” என மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Related Posts