வடக்குக்கான நல்லிணக்க பயணம் ஆரம்பம்

தெற்கு ஊடகவியலாளர்களையும் வடபகுதி ஊடகவியலாளர்களையும் இணைக்கும் நல்லிணக்கப் பயணம் இன்று(26) ஆரம்பமாகிறது.

வெகுஜன ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையிலான ஊடகவியலாளர்கள் குழு இன்று யாழ். நகர் நோக்கிப் புறப்படுகிறது. ‘பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பயணத்தில் தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கும், வடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கான கலாசார நிகழ்வுகள், சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. லேக்ஹவுஸ் நிறுவனம் ஒரு வீட்டையும், ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் மற்றுமொரு வீட்டையும், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் மூன்றாவது வீட்டையும் அமைத்துக் கொடுக்கவுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் புலனாய்வுப் பிரிவினரால் தாம் கண்காணிக்கப்படுகின்றோம் என்ற சந்தேகம் வடபகுதி ஊடகவியலாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்பு படையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று ரயிலில் பயணத்தினை ஆரம்பித்து குருநாகல், அநுராதபுரம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் ரயில் நிறுத்தப்பட்டு பிராந்திய ஊடகவியலாளர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

வடபகுதியிலுள்ள அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள் என்பவற்றினையும் அமைச்சர் சந்திக்கவுள்ளார். இத்தினங்களில் கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts