Ad Widget

வடக்கு,கிழக்கில் பொலிஸ் சேவையில் 80 வீதமான தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும்!

நான் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், 13வது அரசியலாப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண பொலிஸ் ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன் ஊடாக அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பொலிஸ் சேவைக்கான ஆளணி உள்வாங்கப்பட்டு, பணிகளில் அமர்த்தப்படுவதன் ஊடாக அந்தந்த பகுதிகளின் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவது இலகுவாக அமையும். அத்துடன், தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாக கட்டியெழுப்புவதற்கும், தொழில் வாய்ப்பின்மையை ஓரளவு குறைப்பதற்கும், சமூக ஒழுக்கங்களைப் பேணுவதற்கும் இயலுமாக அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த 19ம் திகதி வலியுறுத்தியுள்ளார்.

இவ்வடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், தேசிய பொலிஸ் ஆணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் என்பன இந்த ஆணைக் குழு மூலம்தான் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது பற்றிய தெளிவுகள் தேவை. ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும், அந்தந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் மொழிகளில் பணியாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகமாகப் பணியில் அமர்த்தப்படுவது அவசியமாகும் என்பதையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts