Ad Widget

வடக்கில் 6 ஆயிரத்து 682 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் – பிரதமர்

வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கிற்கு இந்த வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சில கால தாமதம் ஏற்பட காரணம் என்னவெனில், 2018 ஆம் ஆண்டில் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2019 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2020 ஆம் ஆண்டுக்கும் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டுக்கென முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் 2021 ஆம் ஆண்டில் முழுமையாக பூர்த்தியாகும். எமது அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும்” என பிரதமர் இதன்போது கூறினார்.

Related Posts