வடக்கில் வைத்தியசாலை வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்!

வடக்கில் நிலவும் வைத்தியசாலைகளுக்கான வெற்றிடங்களில் தகுதியான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் சுகாதாரம், போசனை, சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கின் வைத்தியசாலைகளில் உரிய வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கு வந்து சேவை புரிய வைத்தியர்கள் விரும்புவதில்லை.

வடக்கின் வைத்தியசாலைகளில் சேவையாற்றுவதற்கு வைத்தியர்கள் புறக்கணிக்கின்றனர். ஆகவே இவற்றை கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வடக்கிற்கு தேவையான, வெற்றிடமாகவுள்ள வைத்தியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அத்துடன் மாவட்ட வைத்தியசாலைகளை நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய தரமுயர்த்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts