Ad Widget

வடக்கில் மேலும் 43 பேருக்குக் கொரோனா- கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் 21 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா மூவருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் எட்டுப் பேருக்கும் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஆறு பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த மூவருக்குத் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் நேற்று மட்டும் 1914 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 54 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 590ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 944 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக 99 ஆயிரத்து 153 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக இன்று 13 பேரின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 709 ஆக அதிகரித்துள்ளது.

15 ஆயிரத்து 728 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts