Ad Widget

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா- நான்கு மாவட்டங்களில் தொற்றாளர்கள்!

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 469 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

இதன்படி, வவுனியா பட்டாணி சூர் பகுதியில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொழும்பு சென்றுவந்த நிலையில், அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் கேகாலையைச் சேர்ந்த 23 வயது மாணவிக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைவிட, நல்லூரில் வசிக்கும் ஒருவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts