வடக்கில் முளைக்கும் விகாரைகள் தொடர்பில் அலட்டிக் கொள்ள தேவையில்லை ; டி.எம்.சுவாமிநாதன்

தமிழர் பிரதேசங்களில் பலவந்தமாக வைக்கப்படும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகள் இந்து மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வரை அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் அனைத்து மதத்தினரதும் வழிபாட்டுத் தளங்களும் இருக்கும் நிலையில், வடக்கில் பௌத்த விகாரைகள் இருப்பதில் எந்தத் தவறையும் தான் காணவில்லை என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

போரினால் பேரழிவை சந்தித்த வட மாகாணத்தைச் சேர்ந்த 97 ஆயிரம் பேர் வீடுகளை நிர்மாணித்து கொடுக்குமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதனை நிறைவேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுத்து வருவதாகவும் டி.எம்.சுவாமிநாதன் குற்றம் சுமத்தினார்.

அரசியல் சுயலாபங்களுக்காகவும் தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும், அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தடுத்து வருவதாகவும் அமைச்சர் பகிரங்கமாக சாடினார்.

அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்த 65000 வீட்டுத் திட்டத்திற்கான பொருத்துவீட்டுத் திட்டத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நிராகரித்து கடந்தவாரமும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்த நிலையிலேயே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

Related Posts