Ad Widget

வடக்கில் மலேரியாவை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை

வடக்கில் மலேரியா பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா. குணசீலன் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையிலான குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அமைச்சர், ”செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் என்பவை தொடர்பாக கலந்துரையாடியதுடன், தீர்க்கப்படக் கூடிய சிறிய பிரச்சனைகளுக்கு சுகாதார அமைச்சரினால் தீர்வுகள் வழங்;கப்பட்டு அவற்றிற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

மலேரியா நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையினை ஒரு அவசரகால நடவடிக்கையாக சுகாதார அமைச்சினால் அனுகப்படுகின்றது. ஆரம்பத்தில் மன்னாரின் போசாலை, தலைமன்னார் பகுதிகளில் மலேரியாவை பரப்பும் நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்நுளம்பு வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையினையும், மக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் செய்வதற்கு எமது மாகாண சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்போது, நுளம்பின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாட உரிய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் தங்களுடைய வேலைத்திட்டங்களை குழுவாக ஆரம்பித்துள்ளனர்.

Related Posts