வடமாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் மனிதவலு, தொழிற்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் இவ் அமைச்சின் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் மனதவலு, தொழில்துறை இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, அவ் அமைச்சின் செயலாளர் சுனில் அபேயவர்த்தன, தொழில்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் எம.ஆர்.தர்மசேன, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மற்றும் இத் திணைக்களத்தின் கீழ் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கில் வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர், யுவதிகளின் பதிவுகள் மாவட்ட செயலகத்தினால் கோரப்பட்டிருந்தன. அதற்கேற்ப விண்ணபித்தவர்களின் விபரம், அவர்களில் வேலை வாய்ப்பை தற்போது பெற்றுள்ளோர், வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளை தனியார் துறைகளில் உள்ளீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பைப் பெறுவதில் உள்ள பிரச்சனைகள், மொழி ரீதியாகவுள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இதன்போது, வடக்கில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமானவர்கள் வேலை வாய்பின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், மாவட்ட ரீதியாக உள்ள இது தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ஊடாக தரவுகளைப் பெற்று தேசிய ரீதியில் கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்ப்படவுள்ளதாகவும் தொழித்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.தர்மசேன தெரிவித்தார்.