Ad Widget

வடக்கில் நிதி நெருக்கடியால் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பு; 16 பேர் தற்கொலை

cash-money-paymentவடமாகாணத்தில் தற்போது மேலெழுந்துள்ள நிதிப் பிரச்சினை சமூகம் சார்ந்த பிரச்சினையாக மாற்றம் பெற்று வருகின்றது. குறிப்பாக வணிகர்களிடையே பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் சண்.குறிஞ்சிதரன் தெரிவித்தார்.

ஏ9 வீதி திறக்கப்பட்ட பின்னர் வடபகுதி திறந்த பொருளாதாரச் சந்தையாக மாற்றமடைந்தது. கடந்த சில மாதங்களாக வடக்குகிழக்கில் கடன் சுமைகள் மற்றும் வர்த்தகப் பாதிப்பினால் 16 பேர் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பல வர்த்தகர்கள், பணம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர் எனப் பலதரப்பட்டோர் நிதி நெருக்கடிகள் காரணமாகத் தலைமறைவாகியுள்ளனர். இந்த நிலைமைகளால் குடும்பப் பிரச்சினைகள் ஏற்படுவதாக சமூக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் மத்திய வங்கி எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்பது தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இங்குள்ள வர்த்தகர்களுக்கு இடையில் காணப்படுகின்ற மிதமிஞ்சிய போட்டி காரணமாகப் பெருமளவு பணம் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்து என்ன செய்யலாம் என்ற எந்தத் திட்டமுமின்றி முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொருள்களின் விற்பனைப் பிரதிநிதிகள், முகவர்களின் திணிப்பை ஏற்றுக் கொண்டு பொருள்களை அளவுக்கு அதிகமாக வாங்கித் தமது இருப்பில் வைத்துக் கொள்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் கொள்ளளவை கணிக்காமல் அளவுக்கு அதிகமான பொருள்களை வாங்கிக் குவித்துப் பணத்தை முடக்குவதும் பின்னர் அவற்றுக்காக அதிகூடிய (மீற்றர்) வட்டிக்குப் பணம் வாங்குவதுமே வடமாகாண வர்த்தகர்களின் நிதிப்பிரச்சினைக்குப் பிரதான காரணம் என்றார்.

வங்கிகளின் அறவிடமுடியாக் கடன்தொகை அதிகரித்துச் செல்வது தொடர்பில் கேட்டபோது, நிதி நிறுவனங்களின் கடுமையான போட்டியே இதற்கான காரணம் என்றார்.

தற்போதைய நிதிப்பிரச்சினை தொடருமாக இருந்தால் இரண்டு வருடங்களில் வடமாகாண வர்த்தகர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டங்களை இலங்கை மத்திய வங்கி, வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக ஆரம்பித்திருப்பதாக குறிஞ்சிதரன் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts