Ad Widget

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் சுமார் 3700ற்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீள் கையளிக்க முடியாத தேசிய பாதுகாப்பின் மர்மஸ்தானங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு அதி கூடிய விலை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை தவிர ஏனைய அனைத்து காணிகளும் பொது மக்களுக்கு வழங்கப்படும். தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கில் அவசர நிலை ஏற்பட்டால் கொழும்பில் இருந்து இராணுவத்தை திடீரென கொண்டு செல்ல முடியாது. எனவே வடக்கிலும் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் இராணுவ முகாம்களும் கரையோரப்பகுதிகயில் கடற்படை மற்றும் விமான படைகளும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

அதே போன்று வடக்கில் பலாலி விமான நிலையத்தின் மறு சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு புதிதாக காணிகள் உள்வாங்கப்பட மாட்டாது. அத்தியாவசியனதாக கருதப்படும் காணிகளை தவிர ஏனையவற்றை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எப்போதும் முப்படைகளும் மிகவும் அவதானத்துடன் உள்ளனர். அண்மையில் பெல்ஜியத்தின் தலை நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து , இலங்கையின் விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் கடந்த டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தியிருந்தார். எனவே விமானப்படை ஏனைய தரப்புகளுடன் இணைந்து விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக அகதிகளாகவும் ஏனைய நாடுகளுக்கு செல்லும் நோக்கிலும் பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றனர். இவ்வாறு அச்சுறுத்தலான நபர்களும் இலங்கைக்குள் பிரவேசிக்க வாய்ப்புள்ளது. இதன் போது ஒரு இயக்கத்தை மாத்திரம் சுட்டிக்காட்ட நான் விரும்ப வில்லை. ஆகவே இவ்வாறு வருபவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தொலைப்பேசி அழைப்புகள் வருவதாக அறிய கிடைத்துள்ளது.அண்மையில் விமானத்தில் வெடி குண்டுகள் காணப்படுவதாகவும் அழைப்பு வந்தது. ஆனால் அந்த தகவலில் எவ்விதமான உண்மையும் இல்லை. எனவே இவ்வாறு வெளியாகும் தகவல்கள் தொடர்பில் நாம் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. பொது மக்களுக்கு ஏதெனும் தகவல் கிடைத்தால் பொலிசாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். எமது புலனாய்வு பிரிவு இவ்வாறான விடயங்கள் குறித்து செயற்பட்டு வருகின்றது . அவற்றை வெளிப்படுத்த முடியாது. நான் கூட கேட்டு அறிந்துக் கொள்வதில்லை என்றார்.

Related Posts