வடக்கு மாகாணத்தில் புதன்கிழமை (12) காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்பட்டல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.
வேலைநிறுத்தம் புதன்கிழமை (12) காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை வியாழக்கிழமை (13) காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது.
இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,
வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளிலோ/சுகாதார நிறுவனங்களிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லாததால், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான பிரச்சினையாகும்.
தாதியர்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுகின்றனர். சாதாரண கடமை நேரங்கள், மேலதிக கடமை நேரங்கள், வாராந்த ஓய்வு நாட்களில் கடமைகள், அரசாங்க பொது விடுமுறை நாட்களில் கடமைகள் போன்ற ஒன்றுக்கொன்று வேறுபட்ட கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் கடமைகளை அவர்கள் செய்கின்றனர்.