Ad Widget

வடக்கில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளுக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே பணித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம்நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

ஆளுநர் தலைமையில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள அவரது செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்தார்.

இக்கூட்டத்தில் சுகார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.கேதீஸ்வரன் வட. மாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் பற்றிக்நிறஞ்சன், யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன், சுகாதார அமைச்சின் செயலர் திவாகரன், ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் மற்றும் டெங்கு நோய் தடுக்கும் விசேட செயலணியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இவ்வாண்டில் 1344 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகி யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக டிசம்பர் 24 ஆம் திகதி வரையில் 422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் சுகாதார திணைக்களத்தினர் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

மேலும், கடந்த 27 ஆம் திகதி முதல் டெங்கு நோய்த் தடுப்பு விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாவும் இதன்போது யாழ்ப்பாணம் பசார் வீதியில் 30 இடங்களில் டெங்கு நோய் நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேபோன்று நாவாந்துறை பகுதியில் 45 இடங்களை இனங்கண்டிருப்பதாக தெரிவித்த திணைக்களத்தினர், அவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் 7 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து கருத்து தெரிவித்த ஆளுநர், டெங்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து கோரிக்கைளையும் நிறைவேற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அதற்காக முழு நேரமும் சம்பந்தப்பட்ட தரப்பினர் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலதிக தேவைகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை அவ்வப்போது நடத்தி டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் பணி விரைவாக முன்னெடுக்கப்படும் என ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts