Ad Widget

வடக்கில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது: வடமாகாண சுகாதார அமைச்சர்

கடந்த வருடத்தை விட இவ்வருடம் வட மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக மன்னாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் 2016ஆம் ஆண்டுடன் இவ்வருடத்தை ஒப்பிட்டு பார்க்கின்ற போது டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த வருடம் வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200த்தை தாண்டியிருந்தது. ஆனால் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வட மாகாணத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000த்தை தாண்டியுள்ளது.

கடந்த வருடம் வட மாகாணத்தில் டெங்கு நோயின் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தர் இவ்வருடம் இது வரைக்கும் 7 பேர் டெங்கு நோயினால் வடமாகாணத்தில் உயிரிழந்துள்ளனர்.

வடமாகாணத்தில் மாவட்ட ரீதியாக பார்க்கும் போது யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் இனம் காணப்பட்டுள்ளனர். சுமார் 4700 க்கும் மேற்பட்டோர் இவ்வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களில் குறைவானவர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயினால் மரணித்தவர்களில் 4 பேர் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். எனவே யாழ்.மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் உதவியோடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

வடக்கில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. கனிசமான அளவு மழை யாழ் மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களிலும் பெய்துள்ளது. எனவே டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மழையின் மத்தியில் கவனமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாணத்தின் வலுவை சகல விதத்திலும் பயண்படுத்தி மத்திய அரசின் உதவியோடு டெங்குநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.

குறித்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் பூரண ஒத்தழைப்பை வழங்கினால் மட்டுமே டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்” என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.

Related Posts