Ad Widget

வடக்கில் ஜனவரியில் 557 பேருக்கு கோரோனா தொற்று

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கோரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வடமாகாணத்தில் இதுவரை 805 கோவிட் -19 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 362 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 221 பேரும், மன்னார் மாவட்டத்தில் 176 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும் முல்லலைத்தீவு மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கோரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இன்று வரை வடமாகாணத்திலே கோவிட் -19 நோயால் மூன்று இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புக்களும் வவுனியா மாவட்டத்தில் ஒரு இறப்பும் ஏற்பட்டுள்ளது.

2021 ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 11 ஆயிரத்து 329 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 4 ஆயிரத்து 626 பேரின் மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன – என்றுள்ளது.

Related Posts