Ad Widget

வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது: சித்தார்த்தன்

siththarththanவலி.வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைப்பதற்குப் பாவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடமாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் தற்போது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. கூட்டமைப்பின் வெற்றிக்காக அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்துள்ளதாக நாம் அறிகின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகவும் இப்போது உள்ளது.

நாங்கள் செல்லும் இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பாரிய ஆதரவு இருந்தாலும், அவர்களுடைய வாக்கு வீதத்தை பெறுவதில் தான் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். வழக்கமாக 50 – 55 வீதம்தான் தமிழ் மக்களுடைய வாக்குவீதம் இருந்தது. ஆனால் இதனை 75 வீதமாக அதிகரிக்க வேண்டும்.

இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சிறந்த தீர்வினை வழங்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் ஒரு நியாயமான தீர்வினை எதிர்பார்க்கவும் முடியாது. சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே தமிழ் மக்களுக்கு நியாயமானதாக அமையும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகமும் கவனம் செலுத்துகின்றது.

இன்று கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைகளுக்கான நிதிகள் யாவும் முடக்கப்படுவதோடு நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்தில் சர்வதேச சமூகமும் புலம்பெயர் அமைப்புக்களும் கூட்டமைப்பின் அபிவிருத்திப் பணிகளுக்கு உதவி செய்யத் தயாராக உள்ளன.

வீதி போடுவது மாத்திரம் அபிவிருத்தி அல்ல. மாறாக போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளே மிகவும் முக்கியமானவைகள். அவற்றை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் தெளிவாக சொல்லி வருகின்றனர். ஆனால் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது’ என்றார்.

மாகாண சபை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனவிற்கே தமிழ் கட்சிகளெல்லாம் ஒன்றுபட்டு தெரிவித்திருந்தன.

ஆனால் மாகாண சபை முறையை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். வலி.வடக்கில் அரசாங்கம் சுவீகரித்துள்ள தமிழ் மக்களின் காணிகள் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்கரள மேற்கொள்வதற்குப் பாவிக்கப்படும்.

இதேபோல் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இனப்பரப்பலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் இன்னமும் 10 வருடங்களின் பின்னர் திருகோணமலை மாவட்டம் போல மாறியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts