Ad Widget

வடக்கில் காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய அஞ்சும் மக்கள்!

வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த இரண்டு முறைப்பாடுகளும் காணி தொடர்பான பிரச்சினைகளில் காவல்துறையினர் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் ஆகும். இதில் ஒரு முறைப்பாடு மன்னார் மாவட்டத்தில் இருந்தும் மற்றயது யாழ்மாவட்டத்தில் இருந்தும் பெறப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் வடமாகாணத்தில் காவல்துறையினருக்கு எதிராக 26 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 20 முறைப்பாடுகளுக்கு சரியான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.

எனினும் காவல்துறையினரால் பாதிக்கப்படும் மக்கள் தமது முறைப்பாடுகளை தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் பதிவு செய்வதற்கு அஞ்சுகின்றனர். அதேநேரம் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் பேரில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வும் காணப்படுவதில்லை. எனவே மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி இவ்வருடம் வடமாகாணத்தில் உள்ள சகல கிராம சேவையாளர்களுக்கும் கடிதம் மூலமாக ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இதில் காவல்துறை மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யாமை பதிவு செய்த முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமை பொதுமக்களை அல்லது சந்தேக நபர்களைத் தாக்குதல் அல்லது சித்திரவதைக்கு உட்படுத்துதல், பொதுமக்களை அல்லது சந்தேக நபர்களை உள ரீதியாகத் துன்புறுத்துதல் காவல்துறை தமது அதிகாரங்களைத் துஸ்பிரயோகப்படுத்துதல், முறைப்பாடுகள் தொடர்பில் பக்கச் சார்பாகச் செயற்படல் சட்டவிரோதமான முறையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சந்தேக நபர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தல், காவலில் இருக்கும் சந்தேக நபர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாமை,
சட்டதிட்டங்களை மீறி காவல்துறை செயற்படுதல் போன்ற தவறுகள் காவல்துறையினரிடத்தில் காணப்படும் பட்சத்தில் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் முறையிடலாம்.

தேசிய காவல்துறை ஆணைக்குழு அலுவலகம் யாழ். மாவட்ட செயலகத்தில் 55 ஆம் இலக்க அலுவலகத்தில் அமைந்துள்ளது. இலக்கம் 55 தேசிய காவல்துறை ஆணைக்குழு வடமாகாணம், யாழ்.மாவட்ட செயலகம் எனும் முகவரிக்கு கடிதம் மூலமாக முறைப்பாடுகளைச் செய்யமுடியும் அல்லது 021 510 7722 எனும் தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்புகொள்வதன் மூலம் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

Related Posts