Ad Widget

வடக்கில் காணி சுவீகரிப்பு இடம்பெறாது என ஜனாதிபதி கூறவேண்டும் – சுரேஸ் எம்.பி

இரத்தினபுரியில் வைத்து சொன்னது போல வடக்கிலும் பொதுமக்களின் விருப்பம் இன்றி அவர்களது காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெளிவாகச் சொல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் நேற்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

suresh

அச்சுவேலி இராச வீதியில் பொதுமக்களுடைய 53 பரப்புக் காணிகளை இராணுவ முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்கில் அளவீடுகள் செய்ய நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்திய பின்னர் கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அச்சுவேலியில் பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய (நேற்று 21) தினம் நிலஅளவையாளர்கள் அனுப்பட்டு இருந்தார்கள். பொலிஸாரும் வருகை தந்திருந்தார்கள். சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களின் எந்தவித ஒப்புதலும் இன்றி தான்தோன்றித்தனமான முறையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கு காணி உரிமையாளர்கள் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது என கூறினோம். அதனை பொலிசாரும் ஏற்று கொண்டுள்ளனர்.

நிலஅளவை பணிக்கு வந்தவர்களிடமும் இது சட்டத்திற்கு முரணான வகையில் நீங்கள் காணி அளவீட்டில் ஈடுபட முயல்கின்றீர்கள். அவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் நீங்க ஈடுபட முடியாது எனக் கூறினோம்.

அரசாங்கமும், அதிகாரிகளும் மற்றும் அமைச்சர் உட்பட எல்லோருமே சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்காமல் சட்டத்தின் பிரகாரம் செய்யவேண்டும்.

சட்டத்தின் பிரகாரம் செய்வதாயின் காணி உரிமையாளர்களிடம் அதனை கேட்டு, அவர்களுடன் கலந்துரையாடி, மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுடன் அது தொடர்பாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் வடக்கு, கிழக்கில் மட்டும் சட்டத்திற்கு புறம்பாக இவ்வாறு மேற்கொள்வது ஆக்கபூர்வமானது அல்ல.

இரட்னபுரவில் அண்மையில் ஜனாதிபதி உரையாற்றும் போது, பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சுவீகரிக்ககூடாது என கூறி இருக்கின்றார். ஆகவே அந்த விடயம் இரட்னபுரவுக்கு மட்டுமல்ல அது வடமாகாணத்திற்கும் செல்லுபடியாகும் என்பதை நாங்கள் நம்புகின்றோம்.

பொதுமக்களின் காணிகளை அவர்களின் விருப்பமின்றி வடக்கிலும் சுவீகரிக்க முடியாது என்பதை ஜனாதிபதியும் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதனை இந்த அதிகாரிகளும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

காணி அளவீடு கைவிடப்பட்டது

அச்சுவேலியில் பதற்றம்

Related Posts