Ad Widget

வடக்கில் கடமையாற்றும் காவல்துறையினருக்கு சுடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது!

வடக்கில் கடற்மையாற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தை வழங்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடக்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கு சுடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் யாழப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காவல்துறையினரைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரம் கிடையாது. இருப்பினும் அவர்களது அதிகாரி அனுமதித்தால், மரணம் ஏற்படாத வகையிலோ அல்லது மரணம் ஏற்படும் வகையிலோ அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளமுடியும்.

தற்பொழுது வடக்கில் கத்திக்குத்து, வாள்வெட்டு போன்ற குற்றச் செயல்களால் மக்களைக் கொல்லும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், வடக்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கிகளின் பாவனை இன்றியமையாததாகியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுடுவதற்கு இரவுநேரக் கடமைகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts