வடக்கில் உள்ள விசேடதேவையுடையோருக்கான புனர்வாழ்வுக்கு நிதிவழங்க சுகாதார அமைச்சர் இணக்கம்

வடக்கு மாகாணத்திலுள்ள விசேட தேவையுடையோருக்கான புனர்வாழ்வு செயல் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தின இணக்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரத்த வங்கி திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தினவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் உரையாற்றுகையில்,

வடக்குமாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்டார். இதன்போது மத்திய சுகாதார அமைச்சரின் உதவியினால் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் விசேட சிகிச்சை பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் போர் காரணமாக வடக்கில் விசேட தேவையுடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இது ஏறத்தாள 45 ஆயிரத்துக்கு அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் இது தொடர்பான விபரங்கள் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்திசேகரிக்கப்படுவதாகவும் இவை அனைத்தும்கணணிமயப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின விசேட தேவைக்குட்பட்டவர்களின் புள்ளி விபரங்களுடன் திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமிடத்து மத்திய அமைச்சு மாகாண சுகாதார அமைச்சுக்கு நிதியுதவி வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் வடக்கில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டத்தில் முல்லைத்தீவு, மாங்குளம் பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் கூடிய “விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு வைத்தியசாலை”அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts