Ad Widget

வடக்கில் இன்றும் கனத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மேல் மாகாணங்களில், இன்றையதினம் கனத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மத்திய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும்.

அதேபோன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மேல் மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யும் சாத்தியம் நிலவுகின்றது.

ஆகையால் இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம்,கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இம்மாவட்டங்களில் நேற்றுவரை, 23265 குடும்பங்களைச் சேர்ந்த 74793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம்சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 23054 குடும்பங்களைச் சேர்ந்த 73851 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 12118 குடும்பங்களைச் சேர்ந்த 39932 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6520 குடும்பங்களைச் சேர்ந்த 20737 பேரும், மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும், வவுனியா மாவட்டத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும், கண்டி மாவட்டத்தில் 199 குடும்பங்களைச் சேர்ந்த 890 பேரும்,புத்தளம் மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் யாழில் இவ்வனர்த்தத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 3698 குடும்பங்களைச் சேர்ந்த 11310 பேர், 39 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts