Ad Widget

வடக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சி!

வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் தொல்பொருள் அழிப்பு இடம்பெறவில்லை என்று உயர் கல்வி மற்றும் காலசார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) அமைச்சரவை விளக்க நேரத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கில் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறி இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். நாடு முழுவதிலும் கடந்த இரண்டரை வருடங்களில் தொல்பொருள் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 671 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தொல்பொருள் திருட்டு தொடர்பாக 36 சம்பவங்களும், தொல்பொருள் அழிப்பு தொடர்பாக 75 சம்பவங்களும், சட்டவிரோத புதையல் தோண்டுதல்கள் தொடர்பாக 505 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வடக்கில் கிழக்கில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலேயே அங்கு அதிகமான தொல்பொருள் அழிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், அவ்வாறான தவறான பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts