Ad Widget

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஆதாரத்துடன் வரவில்லை : வடக்கு ஆளுநர்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் முஸ்லிம் மக்கள் யாரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லையென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்-

”வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் அவர்களின் சொந்தக் காணிகளிகளிலேயே குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர்களை குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர்.

குறித்த இருவரின் வேண்டுகோளுக்கு அமைவாக நான் ஏற்கனவே இது தொடர்பில் தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளேன்.

வெளியேறிய மக்களின் காணிகளை சிலர் பிடித்துக்கொண்டு அதற்கு போலியான உறுதிகளை வைத்துள்ளதாக செய்திகள் வந்தாலும், அவ்வாறான கருத்துக்களை எம்மிடம் யாரும் முன்வைக்கவில்லை. உரிய ஆவணங்களுடன் எம்மை சந்தித்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவ்வாறு இதுவரை யாரும் வரவில்லை” என்றார்.

Related Posts