Ad Widget

வடக்கிற்கு நேரில் சென்று ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை அறிவேன்! – ஊடகத்துறை அமைச்சர்

வட பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மஹிந்த ஆட்சியின்போது அரசின் ஊதுகுழல்களாக அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. அரசியல் மயமாக்கத்திற்குள்ளாகின. எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு இடமளிக்கப்படவில்லை. ஆனால், 450 ஊடகங்கள் இன்று சுயாதீனமாக இயங்குகின்றன.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் தற்போது பெறும் சம்பளத்தை வைத்து அவர்களுக்கு வீடு அமைத்தும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்தும் வாழ முடியாது.

எனவே, அரசு அவர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கவுள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவையும் அனுமதிவழங்கியுள்ளது. தற்போது இடம் அளவிடும் பணிகள் நடைபெறுகின்றன. அடுத்தவருடம் முதல் ஏனைய நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

அத்துடன், இரண்டாயிரம் ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் இவ்வருடத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. உயர்கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்படும். அந்தவகையில் எதிர்வரும் 18ஆம் திகதி சிலருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. தகவல் அறியும் சட்டமூலமும் அடுத்தவருட ஆரம்பத்தில் நிறைவேற்றப்படும்.

அதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு தபால்மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். தேர்தல் ஆணையாளருடன் பேசப்படும். இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவேண்டும் என இதற்கு முன்னரும் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மோட்டர் சைக்கிள், கணினிகள் ஆகியன உரியவகையில் வழங்கப்படவில்லை என இங்கு கருத்து வெளியிடப்பட்டது.

அந்தவகையில் நானும் பிரதி அமைச்சரும் வடக்கிற்கு நேரில்சென்று, அங்குள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்படும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

Related Posts