Ad Widget

வடக்கிற்கு தனிப்பொலிஸ் பிரிவு உருவாக இடமளிக்கப்பட மாட்டாது; பொலிஸ் பேச்சாளர்

வடக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளே வடக்கு பொலிஸ் பிரிவில் கடமையாற்ற வேண்டும் என்று வ்டக்கு மாகாணசபை முதலமைச்சர் தெரிவித்த கருத்தினை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

police-ajith-horana

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை. இந்தநிலையில், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு பிராந்திய மக்களின் மொழியையும் கலை, கலாசார, வாழ்க்கை முறையையும் புரியாத காவல்துறையினர் தொடர்ந்தும் அங்கு இருப்பது, ஜனநாயகம் ஏற்பட தடையாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் உள்ளூரில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சியளித்து காவல்துறையில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது உரை குறித்து பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முதலமைச்சர் கூறுவதற்கு முன்னரே காவல்துறை தமிழ் தெரிந்தவர் அதிகாரிகளை வடக்கில் போதுமான அளவு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு பிராந்தியத்தில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழ் மக்கள் முறைப்பாடு செய்ய, தமிழில் குறிப்புகளைப் பெற தமிழில் நீதிமன்ற அறிக்கைகளைப் பெறக்கூடியதாகத்தான் இருக்கிறது.

அதேபோல, காவல்துறையினருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சிநெறியின் போது பல்லின சமூகங்களின் கலசாரங்கள் பற்றியும் அவற்றுக்கு மதிப்பளிக்கும் முறை பற்றியும் அறிவூட்டலும் வழங்கப்படுகிறது. எனவே முதலமைச்சர் இப்போது சொல்லியுள்ளதை நாங்கள் யுத்தம் முடிய முன்னரே செய்துவிட்டோம். புதிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை . வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் மட்டும்தான் வாழ்கிறார்கள் என்று கூறமுடியாது. வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்கள் இருக்கிறார்கள். மன்னாரில் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அதேபோல எதிர்காலத்தில் இன்னும் குடியேறவும் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அனுராதபுர எல்லையில் சிங்கள மக்கள் கூடுதலாக வாழ்கிறார்கள். இதேவேளை, பிரபாகரன் இந்த யுத்தத்தை 1970களில் தொடங்கும் போதும் நிலைமை இப்படித் தான் இருந்தது. இப்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் எப்போது ஏற்படும் என்று சொல்லமுடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts