Ad Widget

வடக்கின் விவசாயத்தில்சிங்கள நியமனங்கள் மீளப்பெறாவிடில் போராடுவோம் – பொ.ஐங்கரநேசன்

வடக்கில் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உதவியாளர்களாக மிகப்பெரும் எண்ணிக்கையில் சிங்களவர்களை நியமித்திருப்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. தமிழ்மக்களின் விவசாயத்துக்கு,தமிழ்மக்களின் பண்பாட்டுக்கு, தமிழ் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த நியமனங்களை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிடில், அதற்கெதிராக நாம் போராடுவோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 33ஆவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (25.08.2015) இடம்பெற்றபோது வடக்கில் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உதவியாளர்களாக அதிக எண்ணிக்கையில் சிங்களவர்களை நியமித்திருப்பது தொடர்பாக அவைத்தலைவர் கண்டனத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்திருந்தார். அதையொட்டி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேர்தல் காலத்தில் வடக்கில் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உதவியாளர்களின் நியமனங்கள் நடைபெற இருப்பதும், இவர்களில் 90 விழுக்காடு சிங்களவர்களாக இருப்பதும் தெரியவந்த உடனேயே இது தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்கும், எமது முதலமைச்சரின் மூலம் இந்நியமனங்களை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது. விவசாயிகளும் இந்நியமனங்களுக்கு எதிராக யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் ஒன்றையும் நடாத்தியிருந்தார்கள். இதன் விளைவாகத் தேர்தல் ஆணையாளர் தேர்தல் முடியும்வரை நியமனங்களை ஒத்திவைக்குமாறு பணித்திருந்தார். ஜனாதிபதியின் செயலாளரிடம் இருந்து முதலமைச்சருக்கு அவரது கடிதம் விவசாய அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கடிதமும் வந்திருந்தது.

ஆனால், எமது கோரிக்கைகளையும் விவசாயிகளின் போராட்டங்களையும் பொருட்படுத்தாமல் கமநல அபிவிருத்தித் திணைக்களம் தேர்தல் முடிந்த உடனேயே மிகவும் இரகசியமான முறையில் நியமனங்களைச் செய்து முடித்திருக்கிறது. சிங்களவர்களின் எண்ணிக்கை இப்போது குறைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வடக்கில் இப்போது வழங்கப்பட்டுள்ள 192 நியமனங்களில் 158 பேர் சிங்களவர்கள் உள்ளார்கள்.

விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உதவியாளர்களின் கடமைப் பட்டியலில் கிராம மட்டங்களில் விவசாயிகளின் அறிவை மேம்படுத்துவது இவர்களது பணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களமொழி புரியாத எமது விவசாயிகளின் அறிவை தமிழ் தெரியாத இவர்களால் எவ்வாறு மேம்படுத்த இயலும்?. இவர்களின் கடமைகளில் ஒன்றாக,விவசாயிகளின் பண்பாட்டைப் பேணிப்பாதுகாப்பதும் இடம்பெற்றுள்ளது. தனித்துவமான உழவுமுறை, பயிரிடும்முறை, நீர்ப்பாசனமுறை என்று தென்இலங்கையிலிருந்து வேறுபட்ட எமது விவசாயப் பண்பாட்டை இவர்களால் எவ்வாறு பேணிப்பாதுகாக்க முடியும்?. மாறாக, இந்நியமனங்களானது எமது விவசாயத்தைப் பெருமளவுக்குப் பாதிக்கச் செய்வதோடு தமிழ்மக்களின்தேசிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் எமது தனித்துவமான விவசாயப் பண்பாட்டையும் சீரழிப்பதாகவே அமையும்.

பொது நிர்வாகச் சுற்றுநிருபம் இலக்கம் 15Æ90 இல், இலிகிதர் பதவிக்குக் கீழ்ப்பட்ட நியமனங்கள் மாவட்ட ரீதியாக, மாவட்டங்களின் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசாங்கம் தான் வழங்கியுள்ள முறையற்ற இந்நியமனங்களை உடனடியாக மீளப்பெற்று, மாவட்ட ரீதியான இன விகிதாசாரத்துக்கு ஏற்ப மீளவும் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts