வடக்கின் பொருளாதார விருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சத்து உறுதியளித்துள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்திய உயர்ஸ்தானிகர் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அமைச்சின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், பலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டி துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம் உட்பட மன்னார் ஊடாக தனுஷ்கோடிக்கான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக கூறினார்.
அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்திற்கு வடமாகாணத்தில் இருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகள் இவ்வாறான வாய்ப்புக்களை தவற விடுவதாகவும் அவர் தம்மிடம் கூறியதாக முதலமைச்சர் கூறினார்.
அரசியல் ரீதியான விடயங்களை அறிந்து கொள்ளவதற்கு அவர் அதிக ஈடுபாட்டை காட்டவில்லை எனவும், வட மாகாணத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான வழிகள் பற்றி சிந்தித்தால் அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தாக, முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.