Ad Widget

வடக்கின் மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு அனுபவங்களை அறிந்துகொள்ள வெளிநாட்டினர் வருகை

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றாடல் மதிப்பீட்டில் இருந்து அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக ஐவரி கோஸ்ற் மற்றும் நேபாளம் நாட்டில் இருந்து உயர் மட்டக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை (21.03.2017) யாழ் பொதுநூலகத்தில் அமைந்துள்ள வடமாகாணசபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றுள்ளது.

மூன்று தசாப்தகால யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பற்றிய தரவுகள் இல்லாமல், இயற்கை வளங்கள் பற்றிய சரியான மதிப்பீடு இல்லாமல் செய்யப்படும் அபிவிருத்திகள் நிலையானதாக அமையாது. அந்தவகையில், சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் வடக்கில் ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு ஒன்றை ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுசரணையுடன் மேற்கொண்டது.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ற் உள்நாட்டு யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாளம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. இரண்டு நாடுகளும் அழிவுகளுக்குப் பின்னர் தற்போது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்நாடுகளிலும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் சுற்றாடல் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ள உள்ளது. இதற்கு முன்னோடியாகவே வடக்கில் மூலோபாய சுற்றாடல் மதிப்பீட்டை மேற்கொள்ளும்போது பெற்ற அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் நோக்குடன் இரு நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வடக்குக்கு வருகை தந்துள்ளனர்.

அபிவிருத்தியில் மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு ஒன்றின் அவசியம், வடக்கில் இதனை மேற்கொள்ளும்போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள், அபிவிருத்திகளை சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத வகையில் மேற்கொள்வதில் உள்ள சவால்கள், இதன்போது எழுகின்ற முரண்பாடுகள் போன்ற விடயங்கள் இக்கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டன. கலந்துரையாடலின் நிறைவில் வடக்கின் மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு அறிக்கையின் வரைவு நகல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம், ஐக்கியநாடுகள் சுற்றாடல் திட்டம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் ஐவரி கோஸ்ற், நேபாள நாட்டின் அமைச்சு மட்டப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Related Posts