Ad Widget

வடக்கின் பொருளாதாரத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றாகக் கூட்டுறவைப் பலப்படுத்துங்கள்!-பொ.ஐங்கரநேசன்

நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கும் பிரதான தூண்களாக அரசதுறையும் தனியார்துறையும் விளங்குகின்றன. அத்தோடு, நாட்டின், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைத் தாங்கும் மூன்றாவது தூணாகக் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்துங்கள் என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

01

வலிகிழக்கு வடபகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் சர்வதேச கூட்டுறவு தினவிழா நேற்று வெள்ளிக்கிழமை (08.07.2016) கொண்டாடப்பட்டது. புத்தூரில் அமைந்துள்ள சங்க மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கூட்டுறவுத்துறையின் வெற்றி கூட்டுறவாளர்களின் ஒற்றுமையிலேயே அதிகம் தங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறையில் நுழைந்த கட்சி அரசியல் தலையீடுகளால் கூட்டுறவாளர்கள் அணிகளாகப் பிரியவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலை மாறவேண்டும்.

கூட்டுறவுக் கொடி வானவில்லின் ஏழு வண்ணங்களையும் கொண்டுள்ளது. மிகவும் பொருத்தமாகவே இது தேர்;வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏழு நிறங்களும் கூட்டாகச் சேர்ந்துதான் எம்மைச் சூழ உள்ள பிரகாசமான இந்த வெள்ளை ஒளியை உருவாக்கியுள்ளது. இந்த வெள்ளொளியைப் பகுத்துப் பார்த்தால்தான் அதன் பின்னால் ஏழு நிறக்கதிர்களும் கூட்டாகச் சேர்ந்திருப்பது தெரியும்.

வெள்ளொளியைப் போன்றே கூட்டுறவுத்துறையும் பிரகாசிக்க வேண்டும். அதற்கு கூட்டுறவாளர்கள் தங்களுக்கிடையே இருக்கக்கூடிய சாதி, மத, அரசியல் பேதங்கள் எல்லாவற்றையும் மறந்து கூட்டாக உழைக்க வேண்டும். இந்தக் கூட்டு உழைப்பு கூட்டுறவாளர்களின் தனித்தனி அடையாளங்களைப் பின்தள்ளி, கூட்டுறவு என்ற பெரும் சக்தியாக ஒளிரும். அப்போது, கூட்டுறவுத்துறை பொருளாதாரத்தின் மிகப்பலமான தூண்களில் ஒன்றாக நிமிரும் என்றும் தெரிவித்துள்ளார்.

சங்கத்தின் தலைவர் தி.தாமரைச்செல்வனின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவு தினவிழாவில் கூட்டுறவுத் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மேலும், சங்கத்தின் சிறந்த பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

03

04

05

06

07

08

09

Related Posts