Ad Widget

வடக்கின் நெல் விளைச்சலைக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்யும் – விவசாய அமைச்சர்

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடமாகாணத்தில் தற்போது விளைந்துள்ள நெல் முழுவதையும் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்ய முன்வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

IMG_1396

கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதன் காரணமாக வடமாகாணத்தின் நெல் உற்பத்தியில் இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படவுள்ள உணவுப் பற்றாக்குறைவை எவ்வாறு எதிர் கொள்ளலாம் என்பது பற்றிய கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (04.02.2014) யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் வடமாகாண சபைக்கென ஒதுக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

வடமாகாணத்தில் விளையும் நெல்லில் கணிசமான அளவைத் தென்பகுதி வர்த்தகர்களே கொள்வனவு செய்து வருகின்றனர். அதுவும், வயலில் அறுவடைசெய்யும்போதே கொள்வனவு செய்வதால் நெல்லில் இருக்கும் ஈரலிப்பைக் காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலையைக் கொடுப்பதற்கும் கொள்வனவாளர்கள் முன் வருவதில்லை.

இவற்றைப் பலரும் மாகாண விவசாய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே வடக்கின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், நெல் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த ஆண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நெல்லை முழுமையாகக் கொள்வனவு செய்ய முன்வரவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆண்டுதோறும் அரச அதிபர்களினால் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும் குறிப்பிட்ட தொகை முற்பணத்தைப் பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட நெல் கொள்வனவைச் செய்து வருகின்றன. நெல் அறுவடை ஆரம்பமாக இருப்பதால் அரச அதிபரிடம் இருந்து பெறப்படும் முற்பணத்தை விரைந்து பெறுவதற்கும், அந்நிதியை அதிகரிப்பதற்கும் ஆவன செய்யப்படவேண்டும் என்றும், தேவையேற்படின் வங்கிகளின் கடன் உதவியைப் பெறலாம் என்றும் இக்கலந்துரையாடலில் முடிவாகி
உள்ளது.

கூட்டுறவாளர்கள் கொள்வனவு செய்யும் நெல்லை உலரவிடுவதற்கும்,களஞ்சியப்படுத்துவதற்கும் போதிய வசதிகள் இல்லாது இருப்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினார்கள். அவசரநிலையாகக் கருதி இருக்கின்ற குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்தி உச்சபட்சக் கொள்வனவைச் செய்யுமாறும், இதற்குரிய வசதிகளைச் செய்வதற்கு ஆவன செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

IMG_1393

மாகாணக் கூட்டுறவுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் மாகாண உள்ளுராட்சி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் வ.மதுமதி, மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்கள் மற்றும் மக்கள் வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் கே.சுசீந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts