Ad Widget

வடக்கின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் தமிழகத்திடம் விண்ணப்பம்: மாவை

இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் உலகின் வளர்ச்சியடைந்த பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசின் அனுசரணையில் யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் நூல்களை கையளிக்கும் நிகழ்வு, தமிழக அமைச்சர் செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவை இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உலகின் எதிர்கால பொருளாதார வல்லரசாக இந்தியாவே திகழுமென அவுஸ்ரேலியாவிற்கு தான் சென்றிருந்தபோது, நிபுணர்கள் குறிப்பிட்டிருந்ததாக மாவை இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு கல்வி மற்றும் பொருளாதரத்தில் இந்தியா உயர்வடைந்து செல்வதைப் போன்று, அறிவியல் ரீதியான வளர்ச்சியில் இலங்கை பங்குகொண்டால்தான் கல்வியில் பின்தங்கிய நிலையை மாற்றலாம். இந்நிலையில், இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் குறிப்பாக, வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டுமென மாவை கேட்டுக்கொண்டார்.

இந்த விண்ணப்பத்தை தமிழக மற்றும் மத்திய அரசிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மாவை இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Posts