Ad Widget

வடக்கின் ஆரோக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் உலக உணவுத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பசிப்பிணிபோக்கும் மருத்துவனாக மிகப்பெரும் மனிதாபிமானப் பணியை உலக உணவுத் திட்டம் ஆற்றி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வடக்கு மாகணத்தில் 964 பாடசாலைகளில், தரம் 1 தொடக்கம் 9வரை கல்விபயிலும் 1,60,000 வரையான மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை குறைந்த ஒரு தொகையல்ல் இது வடக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் 13 விழுக்காடு. இதன் மூலம் உலக உணவுத்திட்டம் வடக்கில் ஆரோக்கியமான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை நல்கி வருகிறது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு ஊட்டும் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய இந்த ஆண்டின் தொடக்க நிகழ்ச்சி வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (09.01.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,

உலகின் மிகப்பெரிய மருத்துவனாக நான் உலக உணவு திட்டத்தையே குறிப்பிடுவேன். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் பசிப்பிணி மருத்துவன் என்ற சொற்றொடர் ஒன்று உள்ளது. பசித்த வாய்க்கு ஆகாரம் இடுபவன் வெறுமனே குடலில் ஏற்படும் பசி உணர்வை மாத்திரம் தணிக்கவில்லை. பசித்தவனின் உடல் ஆரோக்கியத்துக்கும், உள ஆரோக்கியத்துக்கும் ஒவ்வொரு கவளம் உணவும் ஒவ்வொரு அத்திவாரக் கல்லாக அமைகிறது. அதுவும், குழந்தைகளின் பசியைப்போக்குவது என்பது வேறு எந்த மருந்தும் தரமுடியாத உடல், உளநல ஆரோக்கியத்தை அந்தப் பாலகர்களுக்குத் தருகிறது. அந்த வகையில் உலகின் தலைசிறந்த மருத்துவனாக உலக உணவுத் திட்டம் ஆண்டுதோறும் உலகில் 20 மில்லியன் குழந்தைகளுக்கு உணவை வழங்கிவருகிறது.

உலகின் தலை சிறந்த ஆசிரியனாகவும் உலக உணவுத்திட்டம் விளங்குகிறது. உலகின் அறிவுப்பசியைத் தீர்க்கவல்ல நல்லாசிரியர்களாலேயே மாணவர்களைப் பாடசாலையை நோக்கிக் கவர்ந்திழுக்க முடியும். நல்லாசிரியன் ஒருவனாலேயே, மாணவர்களின் மனோநிலையைக் கற்றலுக்கேற்ற தயார் நிலைக்குக் கொண்டுவரமுடியும். இன்று உலக உணவுத்திட்டம் மாணவர்களைப் பாடசாலையை நோக்கிக் கவர்ந்திழுக்கும் காந்தம் போலச் செயற்பட்டு வருகிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற உணவுதான் அவர்களுக்குக் கிடைக்கும் போசாக்கு நிறைந்த உணவாக உள்ளது, அநேக மாணவர்களுக்குப் பாடசாலையில் கிடைக்கும் ஒரு நேர உணவுதான் அவர்களுக்கு ஒரு நாளில் கிடைக்கும் ஒரே உணவாகவும் உள்ளது, அந்த வகையில் உணவைக் காட்டியேனும் மாணவர்களைப் பாடசாலைக்கு வரவழைத்து, பசியை போக்குவதன் மூலம் கற்றலுக்கான அகச்சூழலையும் உருவாக்குகின்ற மிகப்பெரும்பணியை உலக உணவுத்திட்டம் ஆற்றி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் சரஸ்வதி மோகநாதன் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் இயக்குநர் டேவிட் காற்றுட், இலங்கைக்கான பிரதிநிதி ஷெல்லி வைற்றிங் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு..

Related Posts