Ad Widget

‘வடக்கின் அபிவிருத்திக்கு 180 கோடி; சல்மான்கானுக்கு 200 கோடி’

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு 180 கோடி ரூபாய்களை ஒதுக்கிய அரசாங்கம், தேர்தல் பிரசாரத்துக்காக ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு 200 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதுதான் நாட்டில் தமிழ் மக்களின் நிலை என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.

sugirthan-tna

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், பருத்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பருத்தித்துறை சிவன் கோவில் கலாச்சார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இவ்வாறானதோர் அரசாங்கம் எமது நாட்டுக்கு தேவையா என நாம் தீர்மானிக்கும் காலம் மிக அருகில் வந்துவிட்டது. ஆகவே, சரியான தீர்மானத்தை எடுத்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புமாறு மக்களிடம் கேட்டு கொள்கின்றேன்’ என்றார்.

‘இதுவரை காலமும் தேசியத்துக்காக போராடிய கூட்டமைப்பிடம் கடந்த ஒரு வருடமாக தமிழ் மக்களின் அபிவிருத்தியையும் மக்கள் ஒப்படைத்து இருக்கின்றார்கள். ஆனால், அந்த அபிவிருத்தியை மேற்கொள்ள இந்நாட்டின் அரசாங்கம் முட்டுக்கடையாக இருகின்றது.

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் செலவு செய்யவில்லை. நிதி திரும்பி திறைசேரிக்கு செல்கின்றது என கதை அளந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், நாம் நிதியை நூறு வீதம் செலவழித்துவிட்டோம்.

தமிழர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது எனக்கூறுகின்றனர். அவர்களுக்கு ஒன்றை சொல்லுகின்றோம், நாங்கள் முப்படைகளையும் வைத்து நிர்வாகம் செய்தவர்கள். எங்களால் சிங்கள அரசியல்வாதிகளை விட திறமையாக நிர்வாகம் செய்ய முடியும்’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

‘இந்த நாட்டில் பக்கச்சார்பான அரசியலே நடக்கின்றது. கிராமத்துக்கு ஒரு மில்லியன் திட்டத்தில் மற்ற மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகளின் முன்மொழிவுடன் அரச உத்தியோகத்தர்களால் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், வடக்கில் மட்டும், மக்களின் அங்கீகாரம் இல்லாதவர்களின் முன்மொழிவுடன் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்கள் தங்களுக்கு சார்பானவர்களுக்கு மட்டுமே. வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுகின்றார்கள். வறியவர்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதன்போது புறக்கணிக்கப்படுகின்றார்கள்’ என சுகிர்தன் மேலும் தெரிவித்தார்.

Related Posts